X

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தை தவிர்க்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டு உள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகின்றனர். இதில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

அ.தி.மு.க.வுக்கு வரும் கடித தொடர்புகள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்குதான் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் தேர்தல் கமிஷனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் கடிதங்களும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் கூட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டுதான் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருந்தனர்.

இப்படி எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் வாக்குப்பதிவு) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கருத்தை கேட்டறிய யார் பெயருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்பதை விளக்கி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு விளக்க கடிதம் அனுப்பி இருந்தது. அதில் அ.தி.மு.க.வுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி இருந்தது.

இதன் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த வியாழக்கிழமை தபால் பட்டுவாடா செய்யும் மெசேஞ்சர் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார். இதே போல் தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் தபால் கொடுத்து அனுப்பினார்.

இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டனர். இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ‘ஸ்பீடு போஸ்ட்’ மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.

2-வதாக வந்த அந்த கடிதத்தையும், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று முன்தினம் தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது. இதனால் கடிதம் திரும்பி வந்த விசயத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று இ.மெயில் மூலம் தெரிவித்துள்ளார். இனி மேல் தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் பிரதிநிதியை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி இனிவரும் கடிதங்களை தங்களுக்கு இ.மெயில் மூலம் அனுப்பி வைக்குமாறும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

சேலத்தில் இருந்து நேற்று சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார். அப்போது நடைபெற்ற ஆலோசனையில் தேர்தல் கமிஷன் மறுபடியும் நமக்கு இடைக்கால பொதுச்செயலாளர் என்று கடிதம் அனுப்பினால் நேரில் சென்று பங்கேற்கலாம். அப்படி கடிதம் அனுப்பாத நிலையில் தேர்தல் கமிஷனின் கூட்டத்தில் பங்கேற்றால் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நாம் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டு விடும்.

எனவே இதை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் கடிதம் வாயிலாக அ.தி.மு.க.வின் கருத்துக்களை எழுதி கொடுத்து விடலாம் என்று தெரிவித்ததாக தெரிகிறது. தேர்தல் கமஷனின் ஆலோசனை கூட்டத்துக்கு இன்னும் 12 நாட்கள் அவகாசம் இருப்பதால் பொறுத்திருந்து அதற்கேற்ப முடிவு செய்யலாம் என்றும் கருத்து பரிமாற்றம் நடந்துள்ளது.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் இடையேயான பனிப்பேர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கட்சி நிர்வாகிகள் ஆதங்கத்துடன் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.