Tamilசெய்திகள்

தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை – வாகன சோதனையில் ரூ.86 லட்சம் பறிமுதல்

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், சட்டசபையில் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் தேர்தல் தேதியை அறிவித்ததுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

வாகன சோதனை நடத்தப்பட்ட முதல் நாளான நேற்று மட்டும் மொத்தம் ரூ.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

திருவாரூர் அருகே கானூர் என்ற இடத்தில் திருவாரூர் தாலுகா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரின் பின்புறம் இருந்த பையில் ரூ.50 லட்சம் இருந்தது. அந்த பணம் கொண்டு செல்லப்படுவதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர் நாகையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பதும், அவருடன் 3 பேர் வந்துள்ளதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சத்தை உதவி கலெக்டர் முருகதாசிடம், போலீசார் ஒப்படைத்தனர்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. அந்த கார், நாகை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், பஸ் அதிபரான அவருக்கு கரூரில் புதிய பஸ்சுக்கு பாடி கட்டி வருவதால், அதற்கு கொடுப்பதற்காக அவரது நண்பரான சாகுல் அமீது ரூ.50 லட்சத்தை காரில் எடுத்து சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினார்கள்.

இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நெல்லை அருகே நடந்த வாகன சோதனையின்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து பகுதியில் வீரகேரளம்புதூர் தாலுகா பாதுகாப்பு திட்ட தாசில்தாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான கோமதி சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர்.

காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடியை சேர்ந்த சங்கர்ராஜ் (வயது 40) என்ற வக்கீல் என தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, செங்கோட்டையில் உள்ள தனது அண்ணன் வீடு கட்டி வருவதாகவும், அதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் சங்கர்ராஜ் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் ரூ.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை ஆலங்குளம் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 490 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் நான்கு ரோட்டில் நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, திருச்சியில் இருந்து வந்த, கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரேம்குமாரின் காரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் கைகாட்டி பகுதியில் காரில் வந்த ஆத்தூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நடந்த சோதனையின் போது கார்களில் வந்த லப்பைக்குடிகாடு கணேசன் என்பவரிடம் இருந்து 75 ஆயிரத்து 200 ரூபாயையும், ஆசிம்பாஷா என்பவரிடம் இருந்து 67 ஆயிரத்து 500 ரூபாயையும், சரக்கு வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டம் அரப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் இருந்து 71 ஆயிரத்து 790 ரூபாயையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுளாவிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாமாமணி மற்றும் போலீசார் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் பாரதி பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது, அந்த காரில் கட்டுகட்டாக ரூ.10 லட்சம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டிச்சென்றவரிடம் நிலை கண்காணிப்பு குழுவினர் விசாரித்தபோது, அவரது பெயர் லோகநாதன் (வயது 72) என்றும், பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர் கொண்டு சென்ற ரூ.10 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து பல்லடம் தாசில்தார் சாந்தி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மயில்சாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *