நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே. மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை.
சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 சீட் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது.
கச்சத்தீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரஉள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.
தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறோம். பா.ஜ.க.வினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்திருந்ததால் தான் டி.டி.வி.தினகரனுக்கும், வாசனுக்கும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. தினகரனையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய பா.ஜ.க.வுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். இரட்டை இலையை மீட்பதே லட்சியம் என்று கூறி வரும் தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் உள்ளார்.
அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர்கட்சிதான். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலமாக மாறி விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னர் போலவும், அவரது அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். உதயநிதி தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் செங்கல், புகைப்படம் என்று காமெடி பிராப்பர்ட்டி செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மாலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.