தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: “இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்” என தெரிவித்துள்ளார்.