ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன். நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.