தேர்தலில் தோற்ற திமுக பிரமுகர் வைத்தார் பிரியாணி விருந்து!

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முத்துபெருமாள் தோல்வி அடைந்தார். இதில் துவண்டு விடாத முத்துபெருமாள், மறுநாளே கிராமங்களுக்கு சென்று தனக்கு வாக்களி்த்த வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். அதுமட்டுமின்றி உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் நேற்று முன்தினம் ஊர் விருந்து என்ற பெயரில் கிராம மக்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டனர். அப்போது முத்துபெருமாள், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

இது குறித்து முத்துபெருமாள் கூறுகையில், தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். ஓட்டு எண்ணிக்கையின்போது பெரியாண்டிக்குழி கிராமத்தில்தான் அதிகம்பேர் எனக்கு வாக்களித்தது தெரிந்தது. எனவே அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளேன். இதேபோல் 25-வது வார்டுக்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரியாணி விருந்து வைப்பேன் என்றார்.

பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நன்றி சொல்வதற்கு கூட ஊர் பக்கம் வர மாட்டார்கள். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த தி.மு.க. பிரமுகர் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news