தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி – மீண்டும் இங்கிலாந்து பிரதமராகும் போரிஸ் ஜான்சன்
50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தெரிவித்தன. பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்தது.
அதனை உறுதி செய்யும் வகையில் போரிஸ் ஜான்சன் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி மெஜாரிட்டியை நெருங்கியது. தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜெரமி கார்பின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 349 தொகுதிகளில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இதனால் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. ஏற்கனவே கைவசம் இருந்த பல்வேறு தொகுதிகளை இழந்த தொழிலாளர் கட்சி, 202 இடங்களை பிடித்திருந்தது.
தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.
கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால் அக்கட்சியினர் உற்சாகத்துடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் வெளியானபின்னர், போரிஸ் ஜான்சன், பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.