Tamilசெய்திகள்

தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை – அன்புமணி ராமதாஸ் பேச்சு

கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர், பண்ருட்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். கடலூர் தொழிற்பேட்டை ரசாயனக் கழிவு பாதிப்பு குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த நான் போராட்டம் நடத்தினேன். தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி ஆட்சியில் இருந்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.

தனது தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடும் தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பாருங்கள். முந்திரி விலை வீழ்ச்சிக்கு தற்போதைய தி.மு.க. எம்.பி. ரமேஷ்தான் காரணம். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிலத்தடி நீர் 800 அடிக்கும் கீழாக சென்று விட்டது. நிலக்கரி சுரங்கங்கள் கடலூர் மாவட்டத்தை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது. கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான். ஆரணி பாராளுமன்ற உறுப்பினரான அவர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார்? அவருக்கு இங்கு என்ன வேலை? அங்கு சீட் கொடுக்காததால் இங்கு வந்துள்ளார். அவர் போட்டியிடுவதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு பா.ம.க.வும், கூட்டணியும்தான் முக்கியம்.

தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வாக இருந்த போது, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தங்கர்பச்சானை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர் மனதில் ஆழமான சமூக நீதிக் கருத்துகள் உள்ளன.
நாம் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் உயிர் கொடுத்துள்ளோம். பா.ம.க. ஆள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து பார்ப்பதற்காக இல்லை.

இடஒதுக்கீடு, டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தோம். 2026-ல் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைப்போம். அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக போவதில்லை. உங்களின் எதிரி தி.மு.க. தி.மு.க.வை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.