தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றின் மீது மற்றொன்று கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். சென்னுாரில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தெலுங்கானா தேர்தலில் நீங்கள் உங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு முன்பாக அரசியல் கட்சிகளின் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் பாருங்கள். அதன்பின்னர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் நம்மை ஆள்வது என்பதை முடிவு செய்யுங்கள். பிற கட்சிகள் பட்டியலின மக்களை ஓட்டு வங்கியாகத் தான் பயன்படுத்துகின்றன. ‘தலித் பந்து’ திட்டம் கடைசி பட்டியலின மக்களுக்கு போய்ச்சேரும் வரை எங்கள் கட்சி அரசு பாடுபடும்.
தலித் பந்து என்பது பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். அதன்படி தகுதிவாய்ந்த பட்டியலின வகுப்பினர் தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியமாக தரப்படுகிறது. அம்பேத்கரை தோற்கடித்தார்கள். அம்பேத்கர், பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
தேர்தலில் அவரைத் தோற்கடித்தது, காங்கிரஸ் கட்சிதான். பாராளுமன்ற தேர்தலில் அம்பேத்கரைத் தோற்கடித்தது யார்? என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் அவரைத் தோற்கடித்தது மட்டுமல்ல அவரது சித்தாந்தத்தை அமல்படுத்தியதும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.