பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது.
அந்த கட்சிக்கு வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தனது பிறந்தநாளை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
துணை செயலாளர் எல். கே.சுதீஷ், அவரது மனைவி ஜோதி, பார்த்தசாரதி மாவட்ட செயலாளர்கள் போரூர் தினகர், வேளச்சேரி பிரபாகர், ஆனந்தன் சதிஷ் காந்த், அண்ணல் ஜே உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட உள்ளார்.
எங்களது மெகா கூட்டணி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் நலன்களை பூர்த்தி செய்வோம். தி.மு.க. வாரிசு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது அவர்களின் நிலைப்பாடு. அதை பற்றி பதில் சொல்ல நான் விரும்பவில்லை. இதனை மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.