தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம்! – தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வரும் நியூட்ரினோ அணுத்துகள்களை ஆய்வு செய்ய தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்தின் அருகே உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

இந்தநிலையில் டாடா நிறுவனம் சமர்ப்பித்த ஒரு மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வுப்பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நியூட்ரினோ திட்டம் தொடர்பாக நிபுணர் குழு, பல்வேறு துறைகளின் நிபுணர்களை கொண்டு பரிசோதனைகள் நடத்துமாறு அளித்த பரிந்துரைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்தில் கொள்ளாமல் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பல்வேறு அரிய உயிரினங்கள், அரிய தாவரங்கள், மீன்வகைகள், நீர்வாழ் விலங்குகள், பாலூட்டி இனங்கள் பல்கி பெருகிய பகுதி ஆகும்.

இந்த பகுதியில் இதுபோன்ற திட்டத்துக்கான சோதனைகளை அனுமதிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது. இது அப்பகுதியின் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை ஆகும். எனவே நியூட்ரினோ திட்டத்துக்கான மதிப்பீடு செய்வதற்கு அனுமதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news