Tamilசெய்திகள்

தேனி, குளவி போன்ற பூச்சிகள் தாக்கி பலியாகுபவர்களுக்கு இழப்பீடு – கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு

கேரளாவில் மலையோர பகுதிகளில் சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் விஷப்பூச்சிகளின் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம். பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் இவர் தோட்டத்திற்கு சென்றபோது குளவி கொட்டி பரிதாபமாக இறந்தார். அவருடன் பணியில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியான தொழிலாளி குடும்பத்தினர், அவரது மரணத்திற்கு இழப்பீடு கேட்டு அரசிடம் மனு செய்தனர். இதையடுத்து இறந்து போன தொழிலாளி குடும்பத்துக்கு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கியது. மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ரூ.4300 நிவாரணமும் வழங்கியது.

இதற்கிடையே கேரளாவில் விஷ பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேனி, குளவி போன்ற பூச்சிகள் தாக்கி பலியாகும் நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அணுகலாம் எனக்கூறப்பட்டுள்ளது.