தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க புதிய செயலி அறிமுகம்!
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் கடந்த 24-ந்தேதி நடைபெற்ற போது, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்கனவே 2015-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டுக்கான விவரங்கள் சேகரிப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த பணி முடிவடைந்த நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மீண்டும் புதுப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அசாம் மாநிலம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளை ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதற்காக மொபைல் ஆப்(செயலி) மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்.
ஒரே பகுதியில் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் வசிப்பவர்கள், அல்லது அந்த பகுதியில் இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதில் பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை காண்பித்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அடையாளம் காணும் விரிவான தகவல் தொகுப்பு உருவாக்குவதே தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது.
குடியுரிமை சட்டம் 1955-ன் படி கிராமம், சிறுநகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதிவேடு தயாரித்து அதில் பயோமெட்ரிக் விவரங்களையும் இடம் பெற செய்ய உள்ளனர்.
இந்த பணிகள் முடிந்ததும் 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
2-வது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி வரை நடத்தப்படும்.