முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
2010-ம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சேகரிக்கப்பட்ட தகவல் வேறு மாதிரி இருந்தது.
ஆனால், இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
இதில், ஏதோ வஞ்சக எண்ணம் இருக்கிறது. உள்நோக்கத்தோடு இந்த தகவல்களை சேகரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அப்படி ஒரு எண்ணம் பாரதிய ஜனதா அரசுக்கு இல்லை என்றால் 2010-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்ட வடிவிலேயே இருப்பதை தெரிவிக்க வேண்டும்.
மக்கள் தொகை பதிவேட்டை தேசிய குடியுரிமை பதிவேட்டுடன் இணைக்க மாட்டோம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழகத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் உத்தரபிரதேசத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் சென்ற 1,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அமைதியாக கூடி தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க அரசியல் சட்டத்தின்படி உரிமை உள்ளது.
ஆனால், இதுபோன்ற அமைதியான போராட்டத்தை பாலியல் பலாத்காரம், கொலை போன்ற சட்டம்- ஒழுங்கு மீறல் போல் பாவிக்கிறார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.