பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக போட்டியிட்ட 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பா.ஜ.க. தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி, அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது என மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.