பா.ஜனதா தலைமையில் டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் ஒத்த கருத்துகளை உடைய கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தல களத்தில் களம் இறங்கி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இவ்விரு பெரும் தலைவர்கள் வழியில் அதிமுக செயல்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விலைவாசி உயர்வு குறித்து பேசுகிறீர்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை பற்றி ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். பிரதமர் மோடி தலைமையில் 9 ஆண்டுகால வளர்ச்சியை பார்க்க வேண்டும். கொரோனா காலம், அதற்கு பின் உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை இருக்கும்போது, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது.
பிரதமர் மோடி உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் பெரிய சிறிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலில் 330 இடங்களில் வெற்றுபெறும் என நம்புகிறோம்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பா.ஜனதாவுக்கும் அதிமுக-வுக்கும் இடையே ஒரு உரசல் போக்கு இருந்து வருவது குறித்த கேள்விக்கு, உங்களுடைய பார்வைக்கு அப்படி தெரிகிறது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் 1.5 கோடியாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 1.72 கோடி உறுப்பினராக அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு வருகிறது என்றார்.