தேசிய கால்பந்து போட்டி – தமிழக பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது

பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அமிர்தசரஸ் குரு நானக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக அணி, அரியானா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

நிறைவு விழாவில் இந்திய கால்பந்து சம்மேளன தலைவா கல்யாண் சவுபே கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். பஞ்சாப் கால்பந்து சங்க துணை தலைவர் பிரியா தாபார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 27வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மகளிர் அணி சிறப்பான வெற்றியை பெற்றதற்கு பாராட்டுக்கள். தோல்வியுறாத சாதனையுடன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்த சாதனை முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுவாக இணைந்து செய்த முயற்சி பெருமை அளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து உயர்ந்து நம் மாநிலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறியிருப்பதாவது:-

தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள சந்தியா, இந்துமதி உட்பட அத்தனை வீராங்கனையரையும் பாராட்டுகிறேன்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயின்ற வீராங்கனைகளை அதிகம் கொண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி, இன்னும் பல சாதனைகளை புரியட்டும். கழக அரசு அவர்களுக்கு துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports