பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார்.
அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனியாக செயல்படுகிறார். அஜித் பவார் உடன் பிரபுல் பட்டேலும் சென்றுள்ளார். இவர்கள் தற்போது தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனக் கூறி வருகிறார்கள். நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டார்.
அதன்பின் பேசிய பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ”நானும், அஜித் பவாரும் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு அங்கம். எங்கள் தரப்பில் இருந்து அஜித் பவார் கருத்துகளை முன்னெடுத்து வைத்தார்” என்றார்.
திங்கட்கிழமை காலையில் அஜித் பவார், பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோர் சரத்பவாரை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்பட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சரத் பவார் அவர்களுடைய கருத்துகளை கேட்டுக்கொண்டு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. சரத் பவார் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் அவரை பார்க்கச் சென்று, அவருடைய வாழ்த்தை பெறச் சென்றோம் என்றார் அஜித் பவார்.