தெலுங்கில் குரு பவன் இயக்கத்தில் சுமந்த், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘இதே மா கதா’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் அஜித் பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் டீசரை பார்த்து அஜித் என்ன சொன்னார் என்பதை படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி அஜித் படக்குழுவினரிடம் கூறியதாவது: “எனது நீண்ட நாள் நண்பர் ராம்பிரசாத் காரு உங்களது, ‘இதே மா கதா’ டீசரைக் காட்டினார். டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் வரும் காட்சிகளை உண்மையாகவே நேசித்தேன், அவற்றை எடுத்த விதமும் அருமை.
எனக்கு பைக் ரைடிங் மிகவும் பிடிக்கும், அதனால் நான் உடனடியாக இந்த டீசருடன் கனெக்ட் ஆகிவிட்டேன். உங்கள் அனைவரையும் சீக்கிரமே நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். படம் வெற்றியடைய உங்கள் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். இதில் அஜித் குறிப்பிட்டுள்ள ராம்பிரசாத் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.