தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள்

தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கானா அரசு சிறுபான்மையினருக்கு ரூ.1 லட்சம் உதவிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் நிதியுதவியின் அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு 100 சதவீதம் மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் உத்தரவை தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டது.

இதுகுறித்து முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கூறுகையில், ஜாதி, மத வேறுபாடின்றி வறுமையை ஒழிக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தகுதியான பிரிவினருக்கு அரசு ஏற்கனவே ஆதரவு அளித்து வருகிறது.

அனைத்து சிறுபான்மை சமூகத்தினரின் மேம்பாடு மற்றும் நலனுக்காக மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி சிறுபான்மையினரின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலையை துடைக்க முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது.

ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜனதா அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக 48 சதவீதம் உள்ள பெண் வாக்காளர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் 23 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 வழங்குவதற்கான திட்டத்தை மாநில அரசு தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் பாணியில் காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வரும் பிரியங்கா காந்தி பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.மத்திய பிரதேசத்தில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ரூ.1,500 மாத ஊதியம், சிலிண்டருக்கு ரூ.500 மானியம், இலவச 100 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அறிவித்து உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news