X

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – வரிசையில் நின்று வாக்களித்த நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரைக்கும், 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்திற்கு வந்தார். அவர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த இளம் வாக்காளர் ஒருவருடன் வாக்களிப்பது குறித்து பேசினார்.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் எல்லா மொழிகளிலும் அபாரமாக ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் ஜூனியர் என்.டி.ஆர். அபுல் ரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் “என்னுடைய தெலுங்கானா சகோதர மற்றும் சகோதரிகள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் நபர்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 106 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வாக்கப்பதிவு நடைபெறும். ஆயுதம் தாங்கிய குழுவால் பாதிக்கப்பட்டுள்ள 13 தொகுதிகளில் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 3.26 வாக்காளர்களில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள். 1,63,02,261 பெண் வாக்காளர்கள் ஆவார்கள். முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி. சஞ்சய் குமார் மற்றும் டி. அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதி அறிக்கப்பட்டதில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தது. பிஆர்எஸ் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா 111 தொகுதிகளிலும், கவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துள்ளது. காங்கிரஸ் சிபிஐ-க்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்து 118 இடத்தில் போட்டியிடுகிறது.

2.5 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.