Tamilசெய்திகள்

தெலுங்கானா எருமை மாடு மேய்க்கும் பெண் மீண்டும் தேர்தலில் போட்டி

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா என்கிற பரேலேகா. பி.காம் பட்டதாரியான இவர் வேலையில்லா விரக்தியில் எருமை மாடு மேய்க்கும் தொழிலில் இறங்கினார். ஒருநாள் தான் மாடு மேய்க்கும்போது, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார். அதில், “நான் பரேலக்கா. எவ்வளவுதான் படிச்சி, டிகிரி வாங்கினாலும் நமக்கு இந்த தெலுங்கானா வேலை தராது. அதனாலதான் பிகாம் படிச்சிட்டு, என் அம்மா தந்த காசில், 4 எருமை மாடு வாங்கிட்டு, இப்படி மேய்ச்சிட்டு இருக்கேன். இங்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது” என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோ, வைரலானது. இளைஞர்களின் மத்தியில் புதுவித தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் பிரபலமானார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல்களில் பல வீடியோக்களை வெளியிட்டார். இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் அவரை எருமை மாடு மேய்க்கும் பெண் என செல்லமாக அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோலாப்பூர் தொகுதியில் பரேலக்கா சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு, தெலுங்கானா பல்கலைக்கழக மாணவர்கள் பிரசாரம் செய்தனர்.
இளவரசி பரேலக்கா என்று ஒரு பட்டப்பெயரை வைத்து, செல்லுமிடமெல்லாம் பாடல்களை பாடி, பொதுமக்களை கவர்ந்து வாக்குகளை கேட்டனர். அந்த தேர்தலில் அவர் 5,754 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலிலும் பரேலக்கா களமிறங்கியுள்ளார். அவர் நாகர் கர்னூல் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நான் வாக்குகள் பெற்றேன். பொதுமக்கள் எனக்கு நேர்மையாக வாக்களித்தார்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார்.