Tamilசெய்திகள்

தெலுங்கானா அமைச்சர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் – சோதனை தொடர்கிறது

தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டியின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு என 50 இடங்களில் நேற்று காலை 5 மணிக்கு சோதனையை தொடங்கினார்.

இந்த சோதனையில் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து வந்த 400க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் இருந்து ரூ.5 கோடி பணம் மற்றும் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் மல்லா ரெட்டியின் மகன் சந்தோஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் சந்தோஷ் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சந்தோஷ் ரெட்டிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினரிடம் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மல்லா ரெட்டியின் மகள், மருமகன் துருக்கிக்கு சுற்றுலாவுக்கு சென்று உள்ளனர். அவர்களது வீட்டில் உள்ள 2 டிஜிட்டல் லாக்கர்களின் பாஸ்வேர்டு எண் தெரியாததால் வருமான வரித்துறை அதிகாரிகளால் லாக்கர்களை திறக்க முடியவில்லை. அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அவர்கள் நாடு திரும்ப தாமதம் செய்தால் வங்கி லாக்கர்களை உடைத்து சோதனை செய்யப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் தொலைபேசி அழைப்பு பட்டியலை வைத்து அவர்கள் யார் யாருடன் எப்போதெல்லாம் பேசினார்கள். எதற்காக பேசினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானாவில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் குவிந்து இருப்பதால் அந்தந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.