தெலுங்கானாவை குறிக்கும் ஆங்கில எழுத்து TS யை TG யாக மாற்றிய காங்கிரஸ் அரசு

1963லிருந்து, அரசாங்கங்களுக்கு இடையே இந்திய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளின் போது, மாநிலங்களை குறிப்பதற்கு ஆங்கில எழுத்துக்கள் இரண்டினை கொண்டு குறிக்கும் முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. எடுத்துக் காட்டாக, கர்நாடகா – கேஏ (KA), கேரளா – கேஎல் (KL), தமிழ்நாடு – டிஎன் (TN) என குறிப்பிடப்பட்டு வருகின்றன.

2014ல் ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தெலுங்கானா எனும் தனி மாநிலம் உருவானது. அப்போது முதல், தெலுங்கானா டிஎஸ் (TS) எனும் இரு ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டு வந்தது. கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கான மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வென்றது. அக்கட்சி சார்பில் முதல்வராக ரேவந்த் ரெட்டி (54) பொறுப்பேற்று கொண்டார்.

தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டம், பிப்ரவரி 8 அன்று மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் உரையுடன் தொடங்க உள்ளது.

இந்நிலையில், நேற்று ரேவந்த் ரெட்டி தலைமையிலான கேபினெட் அமைச்சரவை, தெலுங்கானாவிற்கான ஆங்கில குறியீடை “டிஎஸ்” என்பதற்கு பதில் “டிஜி” (TG) என என மாற்றியிருப்பதாக அறிவித்தது. இனி தெலுங்கானா மாநிலம், அரசு கோப்புகளிலும், வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் டிஜி என குறிப்பிடப்படும்.

முன்னர் ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சியின் முந்தைய பெயரான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) எனும் பெயரை குறிப்பிடும் விதமாகவே முந்தைய அரசு, “டிஎஸ்” என உருவாக்கியிருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

அண்டே ஸ்ரீ இயற்றிய “ஜய ஜய ஹே தெலுங்கானா” எனும் பாடலை தெலுங்கானா மாநில கீதமாக அங்கீகரித்து கேபினெட் முடிவெடுத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news