தெற்கு பகுதியை நோக்கி ஓடும் ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்திய இஸ்ரேல், காசாவில் ஹமாஸ் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வந்த இடத்தை சுற்றி வளைத்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அல்-ஷிபா உள்ளிட்ட மிகப்பெரிய மருத்துவமனைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. காசாவின் மிகப்பெரிய மருத்துவமயைான அல்-ஷிபாவின் வெளிப்புறத்தில் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே இந்த மருத்துவமனையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் “காசாவில் ஹமாஸ் அமைப்பு தங்களது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அவர்கள் தெற்கு பகுதியை நோக்கி ஓடுகின்றனர். ஹமாஸ் தளத்தை மக்கள் சூறையாடி வருகின்றனர். அவர்களுக்கு அரசு மீது நம்பிக்கை இல்லை” என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 1,400 பேர் பலியானார்கள். 240 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே ஹமாஸ் முனையில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பின் சுகாதார மந்திரி, காசாவின் வடக்கு பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செயலிழந்துள்ளன. சிகிச்சை பெற்று வந்த குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் ஏழு பேர், 27 நோயாளிகள் கடந்த சில தினங்களில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.