X

தெருவோரம் திரியும் பசுக்களை பராமரிக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு

உத்தரபிரதேச மாநிலத்தில் தெருவோர கால்நடைகளை பராமரிக்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி உரிமையாளர்கள் இல்லாமல் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை வளர்க்க முன்வருபவர்களுக்கு கால்நடை ஒன்றுக்கு நாள்தோறும் ரூ.30 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த தொகை 3 மாதத்திற்கு ஒருமுறை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.110 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெரு ஓரத்தில் திரிந்து பிடிபட்ட சுமார் 1 லட்சம் பசு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கால்நடைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் தலைமையிலும் குழு ஒன்று அமைக்கப்படும்.

2012-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 2 கோடியே 70 லட்சம் கால்நடைகள் உள்ளன.

மேற்கண்ட தகவலை உத்தரபிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்தார்.