தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொள்கிறார்கள். மேலும், பிற தென் மாநில முதல்-மந்திரிகளான பினராயி விஜயன் (கேரளா), பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோரும், மூத்த மந்திரிகளும், தலைமைச்செயலாளர்களும், முதன்மைச் செயலாளர்களும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் பொதுவான பிரச்சினைகளான நதிநீர் பகிர்வு, கடலோர பாதுகாப்பு, இணைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் எல்லை தொடர்பாக பிரச்சினைகள், பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில், நீர், எரிசக்தி, காடு, சுற்றுச்சூழல், வீட்டு வசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறை மற்றும் வழக்கத்தின்படி, மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக அதன் நிலைக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தென்மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் முன் வைக்கப்படும் நிகழ்ச்சி நிரல் ஆராயப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools