இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை உருவானது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது.
2011-ம் ஆண்டில் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் பொறுப்பு ஏற்றது முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரம் அடைந்தது.
தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவும், தனது படை பலத்தை நிரூபிக்கும் வகையிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது.
இது ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறும் செயல் என்பதால் சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் வடகொரியா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
ஆனால் கடந்த ஆண்டு இந்த சூழல் மாறியது. தென்கொரியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் கலந்துகொண்டதன் மூலம் பரம எதிரிகளாக இருந்து இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பு உருவானது.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்து பேசினர். அதேபோல் தென்கொரியா மத்தியஸ்தம் செய்ததின் மூலம் வடகொரியா-அமெரிக்கா உறவிலும் இணக்கமான சூழல் உருவானது.
இந்த சூழலில் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்தது. ஆனால் அதை மீறியும் கூட்டுப்பயிற்சி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், ஜப்பானிய ஆட்சியில் இருந்து கொரியா விடுதலை பெற்ற தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் “2045-ம் ஆண்டுக்குள் கொரிய தீபகற்பம் ஒன்றிணைக்கப்படும்” என கூறினார்.
இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, இனி தென்கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது என அறிவித்துள்ளது. தென்கொரிய அதிபரின் உரைக்கு எதிராக வடகொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்த தருணத்தில் கூட தென்கொரியா தனது கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடர்கிறது. அதே சமயம் அமைதியான பொருளாதாரம் அல்லது அமைதியான ஆட்சியை பற்றி பேசுகிறது. இது முரணானது.
90 நாட்களில் நமது பெரும்பாலான படைகளை அழிக்கத் திட்டமிடும் யுத்த காட்சிகளை அரங்கேற்றும் அதே வேளையில், வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையிலான பேச்சுவார்த்தையை அவர் குறிப்பிடும்போது அவரது சிந்தனை செயல்முறை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
அவர்(மூன் ஜே இன்) உண்மையிலேயே ஒரு வெட்கமில்லாத மனிதர். கொரிய தீபகற்பத்தை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த அவரது கருத்துகள் மிகவும் மோசமானவை. அவை ஒரு பசுவின் வேகவைத்த தலையை சிரிக்க வைக்கும் முயற்சியை போன்றது.
அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு தென்கொரியா கூட்டுப்பயிற்சியை நடத்த முடிவெடுத்ததுதான் காரணம். எனவே தென்கொரியாவுடன் பேச எங்களுக்கு இனி வார்த்தைகள் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், நேற்று அதிகாலை வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் 2 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட்ட 6-வது ஏவுகணை சோதனை ஆகும்.