தென் கொரியாவில் 2022 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நேற்று மேலும் 44 பேர் கொரோனா வைரசுக்கு பலியானதையடுத்து அங்கு உயிரிழப்பு 2788 ஆக உயர்ந்துள்ளது. 78 ஆயிரத்து 824 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 327 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் கணிசமாக குறையத் தொடங்கி உள்ளது. ஆனால், சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
ஈரானில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 245 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் இந்த வைரசுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 256 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், கொரோனா தாக்கம் அதிகம் உள்ள டீகு நகரம் மற்றும் வடக்கு ஜியாங்சாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இங்குதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஜப்பான் மற்றும் ஈராக்கில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்மிக சுற்றுலா வரும் வெளிநாட்டு பக்தர்களுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் ஹஜ் யாத்திரை பாதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈரானில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை ஆஸ்திரேலிய அரசு நீட்டித்துள்ளது. இதுவரை 17 உயிர்களை கொரோனாவுக்கு பறிகொடுத்துள்ள இத்தாலியில், 11 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிரீஸ் நாட்டில் திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.