Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி – உணவு இடைவேளையின் போது இந்தியா 130 ரன்கள் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- ஷபாலி வர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் அவுட் எடுக்க முடியாமல் திணறினர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

இதனால் முதல் நாள் மதிய இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் சேர்த்தது. ஷபாலி வர்மா 65 ரன்னிலும் மந்தனா 64 ரன்னிலும் களத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் இதுவாகும்.

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு மகளிர் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது. 1976-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. அது டிராவில் முடிந்தது. அதன் பிறகு இங்கு இப்போது தான் மகளிர் டெஸ்ட் நடக்கிறது.