இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடுகிறது. அந்நாட்டுக்கு சென்று 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இதற்கான போட்டி அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான போட்டி அட்டவணையில் மாறுதல் செய்யப்பட்டது.
வருகிற 17-ந்தேதி தொடங்க இருந்த டெஸ்ட் தொடர் 26-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல 20 ஓவர் தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய அணி வருகிற 16-ந்தேதி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ரோகித் சர்மா, ரிஷப்பண்ட் அணிக்கு திரும்புகிறார்கள். இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த லோகேஷ் ராகுலும் தேர்வு பெறுகிறார்.
அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் ரகானேயின் பேட்டிங் கடந்த காலங்களில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் தென் ஆப்பிரிக்க தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர், மயங்க் அகர்வால், சுப்மன்கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், சீனியர் வீரரான ரகானேயின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. அணியின் துணை கேப்டனான அவர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாகவும் பணியாற்றினார். ரகானே நீக்கப்படும் பட்சத்தில் துணை கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைக்கும்.
நியூசிலாந்து தொடருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட வேகப்பந்து வீரர்கள் முகமது ஷமி, பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்புகிறார்கள். வீரர்கள் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
தென் ஆப்பிரிக்க தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம் வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன்கில், புஜாரா, ரகானே அல்லது விகாரி, ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ரிஷப்பண்ட், விர்த்திமான் சகா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா அல்லது இஷாந்த் சர்மா.