தென் ஆப்பிரிக்கா எஸ்.ஏ20 கிரிக்கெட் – பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நேற்று முன் தினம் நடந்த முதல் அரையிறுதியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெர்ல் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூசோவ் 56 ரன்கள் குவித்தார். அடுத்து ஆடிய பெர்ல் ராயல்ஸ் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதியில், ஜோபர் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிராம் அதிரடியாக ஆடி சதமடித்து அவுட்டானார்.
தொடர்ந்து ஆடிய ஜோபர்க் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா, சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.