தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வந்தது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 511 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 529 ரன் இலக்காக இருந்தது.
முதல் இன்னிங்சில் செஞ்சுரி அடித்தது போல 2-வது இன்னிங்சில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சதத்தை (109 ரன்) பதிவு செய்தார். நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. 73 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது.
5-வது வரிசையில் ஆடிய டேவிட் பெடிங்காம் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குபிடித்து ஆடினார். அவர் 87 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் இணைந்து நிலைத்து நின்ற பீட்டசன் 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 247 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைடெஸ்ட் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.