தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி – பாகிஸ்தான் வெற்றி
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும், டி காக்கும் களமிறங்கினர். ஆம்லாவும் டு பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். ஆம்லா 59 ரன்னிலும், டு பிளசிஸ் 57 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 41 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக
இமாம் உல் ஹக்கும், பகர் சமானும் இறங்கினர்.
அணியின் எண்ணிக்கை 70 ஆக இருந்தபோது பகர் சமான் 44 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் அரை சதமடித்து அசத்தினார். அவர் 71 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 41 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 – 2 என சமனிலை வகிக்கிறது.