தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஓயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 49 ஒவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பவுமா 142 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மார்கோ ஜான்சன் 32 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன், ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தனர். தனி ஆளாகப் போராடிய லபுசேன் அரை சதம் பதிவு செய்தார். தொடர்ந்து ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், ஆஸ்திரேலியா 40.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லபுசேன் 80 ரன்னும், ஆஷ்டன் அகார் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports