X

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் 575 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து இருந்தது.

டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 200 ரன்னில் காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன் எடுத்தார். டிரெவிஸ் ஹெட் 48 ரன்னும், அலெக்ஸ் கேரி 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. ஹெட் 7 பவுண்டரி , 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் இழந்தார். 6வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 133 பந்தில் 13 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 14வது டெஸ்டில் விளையாடும் அலெக்ஸ் கேரிக்கு இது முதல் சதமாகும். இதற்கு முன்பு 93 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும்.

8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 386 ரன் கூடுதலாகும். அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.