தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் – வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், ரபாடா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். 40 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்னும், எர்வி 26 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலே அரை சதமடித்தார். அவர் 57 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. வெற்றி பெற இன்னும் 33 ரன்களே தேவைப்படுவதால், இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools