தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் – இந்தியா தோல்வி
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 296 ரன்கள் குவித்தது. கேப்டன் டெம்பா பவுமா 110 ரன்களும், ராசி வான் டெர் டுசன் 129 ரன்களும் விளாசினர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, முதலில் கவனமாக ஆடி ரன் சேர்த்தது. துவக்க வீரர் கே.எல்.ராகுல் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தபோதும், ஷிகர் தவான்- விராட் கோலி இருவரும் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். தவான் அரை சதம் கடந்து, தனது ஆட்டத்தை தொடர்ந்தார்.
அணியின் ஸ்கோர் 138 ஆக இருந்த நிலையில் இந்த ஜோடியை மகராஜ் பிரித்தார். அவரது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் மொத்தம் 84 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 152.
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிரடியாக ஆடத் தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன. நெருக்கடியாக கடைசிகட்டத்தில் கடுமையாக போராடிய ஷர்துல் தாக்கூர் பவுண்டரியாக விளாசினார். எனினும், இந்திய அணியால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 265 ரன்களே எடுக்க முடிந்தது. ஷர்துல் தாக்கூர் 43 பந்துகளில், 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன்கள் (அவுட் இல்லை) குவித்தார். பும்ரா 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து உள்ளூர் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் தென் ஆப்பிரிக்க அணி ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.