Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – விகாரிக்கு இடம் கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்று உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் நிச்சயம் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் நியூசிலாந்து தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்த இருவரில் ஒருவரோ, அல்லது 2 பேருமோ இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்திய அணியின் பலமே வேகப்பந்து வீச்சுதான் என்று புஜாரா தெரிவித்து உள்ளார். சீனியர் வீரரான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் எங்கள் பலம். வெளிநாட்டு மண்ணில் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

தென் ஆப்பிரிக்காவில் நிலவும் சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை வடிவமைத்து கொண்டு இந்திய பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான திறமை அவர்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ‌ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ‌ஷர்துல் தாகூர் ஆகிய 6 வேகப்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க தொடரில் இடம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.