X

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

வான் டர் டுசன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு மில்லர் ஒத்துழைப்பு கொடுத்தார். மில்லர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. டுசன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 8 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய பாபர் அசாம் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 103 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் மொகமது ரிஸ்வான் 40 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய ஷதாப் கான் 50வது ஓவரின் முதல் பந்தில் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 5 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்த 3 பந்துகளில் தென்ஆப்பிரிக்கா ரன் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. பஹீம் அஷ்ரப் வெற்றிக்கு தேவையான 3 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நூர்ஜே 4 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சிறப்பாக ஆடி சதமடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.