தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – 177 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட்
தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் முதல்நாள் நாள் மதிய உணவு இடைவேளை பாகிஸ்தான் 25 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டெயின், பிலாண்டர், ரபாடா, ஆலிவியர் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது இயலாத காரியம் என்று நினைத்த இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சர்பிராஸ் அகமது 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். முகமது அமிர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க யாசிர் ஷா (5), முகமது அப்பாஸ் (0), ஷாஹீன் அப்ரிடி (3) அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் 177 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 4 விக்கெட்டும், ஸ்டெயின் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும், பிலாண்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.