தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்! – சாதனை வெற்றி பெற்ற இந்தியா
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடைபெற்று வந்தது.
இந்த போட்டியின், முதல் இன்னிங்சில் இந்தியா 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் பெற்றது. இதையடுத்து மீண்டும் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 2 வது இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அதேபோல், இந்த இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வெற்றிதான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.