இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், 3-வது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 10 ரன்னிலும், புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 12 ரன்னிலும் வெளியேறினார். இதனால் இந்திய அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
விக்கெட்டுக்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். அவர் மூன்றாவது முறையாக சதமடித்து அசத்தினார்.
ரோகித் சர்மாவுக்கு அஜிங்கியா ரகானே நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் 58வது ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மழையும் பெய்துள்ளது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், நோர்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம்நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் ரோஹித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக ரஹானே 115 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆடி வருகிறது.