தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! – 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்று 2 வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 67 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, 395 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அஷ்வின் மற்றும் ஜடேஜா விரைவில் விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து இறங்கிய முன்னணி வீரர்களை மொகமது ஷமியும், ஜடேஜாவும் விரைவில் அவுட்டாக்கினர். ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதனால் நிலைகுலைந்த தென் ஆப்பிரிக்கா அணி 70 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி கட்டத்தில் முத்துசாமியும், டேன் பீட்டும் இணைந்து நிதானமாக ஆடினர். பீட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அப்போது தென் ஆப்பிரிக்கா 161 ரன்கள் எடுத்திருந்தது. இருவரும் இணைந்து 91 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா சார்பில் மொகமது ஷமி 5 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.