தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் – பாகிஸ்தான் வீரர்கள் சதம்

பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்குமுன் பாகிஸ்தான் அணி ‘கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன்’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. இந்த ஆட்டம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

இதற்கு முன் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, தொடக்க வீரர் ரிச்சார்ட்ஸ் 98 ரன்களும், கேப்டன் அக்கர்மான் 103 ரன்களும் விளாச 84.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் சேர்த்து கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க பேட்ஸ்மேன்கள் இமாம்-உல்-ஹக் (23), பகர் சமான் (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷான் மன்சூட் 41 ரன்கள் சேர்த்தார். ஆனால் அசார் அலி (100), பாபர் ஆசம் (104) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

முதல் இன்னிங்சில் முன்னணி வீரர்களான அசார் அலி, பாபர் ஆசம் சதம் அடித்துள்ளதால், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிடலாம் என்ற பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools