X

தென்னாப்பிரிக்கா டி20 லீக் – எம் ஐ கேப்டவுன், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் வெற்றி

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்தப் போட்டி வரும் பிப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. நேற்று கேப்டவுனில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு சொந்தமான அணியான எம்.ஐ கேப்டவுன் அணியும், ராஜஸ்தான் ராயல்சுக்கு சொந்தமான பார்ல் ராயல்ஸ் அணியும் மோதின.

கேப்டவுனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணியின் கேப்டனான ரஷித் கான் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். மில்லர் 42 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய எம் ஐ கேப்டவுன் அணி 15.3 ஓவகளில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 70 ரன்கள் குவித்த டிவால்ட் பிரெவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையடுத்து 2-வது டி20 போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஜோபர்க் கிங்ஸ் அணி 13.6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பெர்ரேரா, ஷெப்பர்ட் இருவரும் ஜோடி சேர்ந்து டர்பன் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. ஷெப்பர்ட் 40 ரன்னில் ஆட்டமிழக்க, பெர்ரேரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 40 பந்துகளில் 5 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 80 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஜோபர்க் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய டர்பன் அணிக்கு மாயர்ஸ் மற்றும் கேப்டன் குயிண்டன் டி காக் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. இருவரும் அவுட்டான பிறகு மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஜோபர்க் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பெர்ரேரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் 3ஆவது எஸ்ஏ20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.