Tamilசெய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வளிமண்டல சுழற்சியால் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கீழ் கோத்தகிரி 12 செ.மீ., கோவை 11 செ.மீ., குண்டேரிபள்ளம் (ஈரோடு), பந்தலூர் (நீலகிரி) தலா 10 செ.மீ., மஞ்சலார், பாளையங்கோட்டை, தேவலா தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.