20 அணிகள் இடையிலான 131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, கவுகாத்தி, இம்பால் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இம்பாலில் ‘சி’ பிரிவில் இன்று (மாலை 6 மணி) நடக்கும் கடைசி லீக்கில் சென்னையின் எப்.சி., உள்ளூர் அணியான நெரோகா எப்.சி.யுடன் மோதுகிறது.
‘சி’ பிரிவில் ஏற்கனவே ஐதராபாத் அணி (9 புள்ளி) கால்இறுதிக்கு முன்னேறி விட்ட நிலையில் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். 4 புள்ளியுடன் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி கால்இறுதிக்கு வந்து விடும். ‘டிரா’ செய்தாலும் போதுமானது தான். ஏனெனில், ‘டிரா’வில் முடியும் பட்சத்தில் சென்னை, ஆர்மி ரெட், நெரோகா ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது கோல் வித்தியாசம் பார்க்கப்படும். அந்த வகையில் சென்னை அணியின் கையே வலுவாக ஓங்கி நிற்கிறது.
சென்னை அணியின் பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறும் போது, ‘இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். அதற்கு ஏற்ப தயாராகி இருக்கிறோம். வீரர்கள், அணிக்காக சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றார்.