தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடியில் நாளை (28.2.2024) காலை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள், இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும், வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரெயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரெயில் பாதை திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சுமாா் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரெயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.

தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். தேசிய நெடுஞ்சாலை 844-ல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்கு வழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை 81-ல் மீன் சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையே இருவழிப்பாதை ஆகிய இந்தத் திட்டங்கள் சுமாா் ரூ.4,586 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பயண நேரத்தைக் குறைத்து, சமூகப்-பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதுடன் புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியின்போது 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். தொடா்ந்து 11.15 மணியளவில் திருநெல்வேலியில் நடக்கும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools