தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் தூத்துக்குடி-எட்டையாபுரம் சாலையில் சுங்கச்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதூர் பாண்டியாபுரம் பகுதியில் வந்த 2 சொகுசு கார்களை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டைகளில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். எனினும் போலீசார் சுதாரித்து கொண்டு காரில் வந்த 6 பேரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 10 பேரை போலீசார் பிடித்து கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகே கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மீண்டும் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.